Monday, September 27, 2010

புன்னகை

"உன்னில் எனை தேடு உன் உள்ளத்திலிருந்து
வெளிவருவேன் உன் புன்னகை வழியாக "
-சந்தோசம்

Monday, September 6, 2010

குட் நைட்

கனவுகளில் இசை போடு
என் நினைவுகளை அசை போடு
என் மேல் இரக்கம் வரும்
நல் உறக்கம் வரும்

Monday, August 16, 2010

தலை குனிந்தேன்

பெண்கள் தலைநிமிர வேண்டும்
நினைத்த நானே!
தலைகுனியவைத்தேன் - அவளை !
அவள்
வெட்கப்பட்டு தலைகுனிந்ததை கண்டு
நானும் தலைகுனிந்தேன் !
வெட்கத்துடன் !

Tuesday, August 10, 2010

இரயில் பயணம்

மரங்கள் இளைப்பாறும் போதுதான் ,
இலைகள் கூட சிந்தும் ,
செடிகளில் மாலைபொழுதில் தான் ,
மொட்டுகள் கூட மலரும்
காதல் மணங்கள் நிலைப்படும்பொழுதான்,
நல்ல கவிதைகள் பிறக்கும் !

நிச்சயமாய்
அவளை காதலிக்கிறேன்
நிச்சயத்திற்கு பிறகே !

இரயில் பயணம் - அவளுடன்
முதல் பயணம்

நிசப்தமாய் பேச
தேர்ந்தெடுத்தேன் - இப்பாதையை
இரயில் பாதையை !

இரயில் என்ஜின் மூச்சுகொட்ட
ஆரம்பிக்கிறேன் எனது - பேச்சை ,

பேச நினைத்தேன் -ஆவலுடன்
ஆனால் பேச முடியவில்லை - அவளுடன்

ஏனென்றால்
கண்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
குறுக்கே
வார்த்தைகளுக்கு - இடமில்லை

செல்லவேண்டிய இடமோ - வெகுதூரமில்லை
பேசாமலே கடந்துவிட்டோம் -பாதி தூரம்
பேசவேண்டுமே - சிலமணி நேரம் !

கண்கள் பட படக்க !
உதடுகள் துடி துடிக்க !
மேனி என்றும் மெய்சிலிர்க்க !


மறுபடியும் ,
ஆரம்பிக்கிறேன் எனது - பேச்சை

என் பேச்சின் குறுக்கே காபி , காபி
என்று சில குரல்கள்

ஆசை முகத்தை பார்த்துகொண்டிருந்த - நான்
திசை திருப்பிய குரலை நோக்கினேன் !
அவனோ -பிளாட்பாரத்தில் ,
இரயிலோ தண்டவாளத்தில்
நின்று கொண்டிருந்தது !


ஆரம்பம் சூடாக இருந்தாலும் ,
காபி பருகிக்கொண்டே பேசலாம் என்று
முடிவெடுத்தேன் !
என்ஜின் கூட புறப்பட தீர்மானித்தது !

நாங்கள் பேசிகொண்டிருக்கும் பொழுது - அங்கே
ஒரு குரல் கடலை , கடலை என்று !

அவள் குலுங்கி ,குலுங்கி சிரித்தால்
இருவரும் பெசிகொண்டிருப்பதை பார்த்து
கிண்டல் என்று !

அவள் சிரித்த கணமே !
முத்து மணிபோல் சிதறியது !
எனது சிந்தனை !

எனை மறந்தேன்!
விண்ணில் பறந்தேன் !

இது உலா பயணம் தானே !
நிலா பயணம் ஆனதே - அருகில்
நிலவை வைத்துக்கொண்டு !

ஏனோ தெரியவில்லை
இரயில் - சொர்க்கபூரிக்கு
செல்லாமல்
சொர்க்கத்திற்கு வந்ததா !
இல்லை
அருகில் அவள்
இருப்பதால் சொர்க்கமே -எனை
தேடி வந்ததா !

என ஆச்சர்யப்படுவதற்க்குமுன்
சொல்லாமல் என் "நா" தடம்புரண்டது
செல்லவேண்டிய இடமோ வந்து சேர்ந்தது !

அவள்
கரம்பிடித்து இறங்கினேன் ,
வீழ்ந்துகிடக்கிறேன் - தனியாக
என் படுக்கையின் மேலிருந்து

உண்மையறிந்தேன் ,
இது இரயில் பயணம் -அல்ல
கனவு பயணம் என்று !

Friday, July 2, 2010

அழகு தேவதை!


அழகின் பதுமையே !
உறவின் புதுமையே !

உனை
சிலையென செதுக்கியவன் - உன்
அழகைக்கண்டு - கற்களாய்
சிதறிபோனான்!

உனை
ஓவியமென தீட்டியவன் -உன்
வண்ணம் கண்டு -மாயமாய்
கரைந்துபோனான் !

உனை வர்ணிக்க வார்த்தைகள்
தேடினேன் - இலக்கணத்தில் !
அதில் வார்த்தைகள் இல்லையென்றாலும்!
தலைக்கணத்தோடு கூறுகிறேன்
இவ்வுலகில் நீ மட்டுமே அழகு
என்று !

உனை பார்த்த கணமே
கண்ணுள் நுழைந்தாய் !
இதயத்தில் கலந்தாய் !

உனை கண்ட சந்தோஷத்தில்
என் குருதி அங்குமிங்குமாய்
பீறிட்டு ஓடியது !

என்னுள்ளே சுருதி மெல்லிணமாய்
இசையிட்டு பாடியது !

கோலி விழி கொண்டு - எனை
கோலமிட்டு செல்கிறாய் !

பார்வையாலே பேசிக்கொண்டு
பேச்சு போட்டியில்
எனை, பேசாமலே வெல்கிறாய் !

விழி கொண்டு - எனக்கு
வழி தருவாய் !

புன்னகைத்து - எனக்கு
விடை தருவாய் !

அன்று அவையிலே
தேவியின் கூந்தல்
செயற்கை மணமென்றான்
நக்கீரன் !

உனை கண்டிருந்தால்
தேவியின் கூந்தல்
இயற்கை மணமென்றிருப்பான்!
அவையிலே அவன் வென்றிருப்பான் !

அன்று சொன்னதும் - உண்மைதான் !
இன்று சொல்வதும் - உண்மைதான் !

உன்
இதழோரம் - சிவப்பு !
இடையோரம் -மறைப்பு !
இருந்தாலும் -என் மனம்
உனை அள்ளதுடிக்கிறது
வாழ்வில் வெல்லதுடிக்கிறது!

Thursday, June 10, 2010

செம்மொழி கவிதை

இனிக்கும் கனியை தேடு
நல் பணிவை தேடு
எம்மொழியிலே !

காரம் உண்டு -தமிழில்
வீரம் உண்டு -அதிலே
விவேகம் உண்டு
எம்மொழியிலே !

அகரம் தொடர்ந்து ,
உயிரோட்டமாய்,
ஔகாரம் -படர்ந்து
உயிர், மெய்யில் - கலந்து
சிகரம் தொட்டதடா
எம்மொழி !
அதுவே செம்மொழி!

காப்பியம் உண்டு -இதிலே
நல் வாக்கியம் உண்டு ,
அழகான அணிகலன் உண்டு ,
எம்மொழியிலே !

அழகுக்கும் தமிழே ,
அறிவுக்கும் தமிழே !

ஈரடி போதுமே
தமிழின்
திருவடி
தெரியும் -அதிலே
முக்காலத்தின் ஆழம்
புரியும்
எம்மொழியிலே !

அன்பை தேடு
அரவணைப்பை தேடு
எம்மொழிலே !

எஞ்ஞானம் உண்டு
விஞ்ஞானமும் உண்டு
எம்மொழியிலே !

பிறவாய் திறக்கட்டும்,
பிறழாமல் பேசட்டும்
எம்மொழியிலே !

"தமிழன் என்பதில்
பெருமிதம் கொள்வோம் !
தமிழுக்கு பெருமை
சேர்ப்போம்" !

எம்மொழி -செம்மொழி


Thursday, May 27, 2010

நீயன்றி நானா?

நீ இல்லாத இவ்விடத்தில்
தவிக்கிறேன் !
உன்னோடு பேசாத நிமிடத்தை
சபிக்கிறேன்!
நீரின்றி மீனா !
நீயன்றி நானா !

Monday, May 24, 2010

துள்ளும் விழி மீன் !!

கலைமானை காணாத ஏக்கத்தில்
தூக்கத்தை தொலைத்த எந்தன்
கண்களில்
விழி மீன் தடுமாற ,
நீந்துவதற்கு
ஏதுவாக
கண்ணீர் குளமாயின
எந்தன் கண்களில் !!

Monday, May 10, 2010

மறைந்தாய் -என்னை மறந்தாய்

வாய்மை நிலைக்கும் பொழுது
பொய்மை மறைந்து போகும்!

உன்னை நினைக்கும்பொழுது
என் மெய்யே மறந்துபோகும்!
மேகமாய் கலைந்துபோகும் !

என்னையே மறக்கும்
உந்தன் நினைவுகள்
எப்படி மறந்தது
என்னை?

Thursday, April 29, 2010

உறவுகள் கொடுத்த பரிசு

அன்புக்காகத் தான் நெருங்கினேன்
உன் அன்பினில் மூழ்கவே இறங்கினேன்!!

அன்பால் வந்த சில உறவுகள்
எனக்கு கொடுத்த பரிசு!!!!
வலிகளும்,
இந்த வரிகளும்
தான்!

Friday, April 9, 2010

கண்கள் பேசும் உண்மை

அவளை காணாமல் தவிக்கும்
என் கண்கள்
சொல்லுகிறது அவள்
இல்லை என்று !

இதயம் மறுக்கிறது என்னுள் தானே
குடியிருக்கிறாள் என்று !

இதய துடிப்பின் புலம்பலைக் கண்டு
கண்கள் கண்ணீர் வடிக்கிறது!

கண்கள் தானே சொல்லியது
அவள் உன் தேவதை என்று!

அதே கண்கள் சொல்லுகிறது
அவளை காணவில்லை என்று !

ஆதலால் பரிசீலனை செய்யாமலே
மறுத்தது இதயம்

இதய துடிப்பாய் அவள் நினைப்பு
என்னுள் தான்
குடியிருக்கிறாள் என்றது !

விழிகள் வழிமாறி ,தடுமாறி
அவள் சென்ற வழித்தடத்தை
காண அங்குமிங்குமாய்
நீந்துவதை கண்ட
இதயம்

சிந்தித்து ,உள்ளத்தை
சந்தித்தது
உண்மையை மட்டுமே பேசும்
கண்கள் சொல்வது உண்மை தானோ?
என்ற பதட்டத்தில்
இதய சுவற்றில் மோதுகிறது
செந்நீராய் வடிகிறது
கண்களில் கண்ணீராய்
வழிகிறது!!!!





Sunday, April 4, 2010

கலையாத நினைவுகள்

கடற்கரையில் இருக்கும் சிலையே !
மண்ணில் உதித்த கலையே !
என்னில் பதித்த கவியே !

உன்னில் என்னை பதித்தேன்
கரையமாட்டாய் என்ற
நம்பிக்கையில்

கரைவாய், கலைவாய்
என்று தெரிந்திருந்தால்
என்னில் உன்னை பதித்திருப்பேன்

கரையாமல் காத்திருப்பேன்

கலையாமல் சேர்ந்திருப்பேன்

Monday, March 8, 2010

மகளிர் தின வாழ்த்துகள்

பெண்கள் மேன்மேலும் உயரவேண்டும்!
நல்-பெண்போல் வாழவேண்டும்!
நல்-விளக்காய் ஒளிரவேண்டும் !
நல்-பாதையை தொடரவேண்டும்!
வாழ்க பெண்கள் என
வாழ்த்தும் ஆண்கள்
வாழ்த்து முக்கியமில்லை!
வாழ்க்கைதான் முக்கியம்
புகழோடு வாழுங்கள்
புகழுக்காக வாழாதீர்கள்
நீங்கள் நலமாய் வாழுங்கள்
பிறரை நலமாய் வாழவிடுங்கள்!

Friday, March 5, 2010

வார்த்தை விளையாட்டல்ல -வாழ்க்கை விளையாட்டு

I- ஐ என்பது உயிர் எழுத்து
உன் eye -ஆல் என் உயிர் எடுத்து

LOVE -(லௌ) என்பது உயிர் மெய் எழுத்து
என் மெய்யில் உன் உயிர் விடுத்து

You - யு என்பது யுனிவெர்சிட்டி
நம்
காதல் சங்கமிக்கும் யுனிவெர்சிட்டி

Friday, February 26, 2010

ஏமாற்றம்

நண்பர்களே !

பிறரை
ஏமாற்றாதீர்கள் !
பிறரிடம்
ஏமாறாதீர்கள் !
இதுவே
வாழ்க்கை
உங்களை ஏமாற்றாமல்
இருக்க வழி !

வலிதான் வாழ்க்கையை வலிமையாக்கும்



வலிதான் வாழ்க்கையை வலிமையாக்கும்

வளமாக்கும் !

Thursday, February 25, 2010

வாடா மலர் - வாடியது

மண்ணில் உதித்த பூ
மணமாலையாகமலே
மலர்மாலையாய் உதிர்ந்துவிட்டது
இம்மண்ணில் !

Wednesday, February 17, 2010

பிறரை நேசி

நீ பிறரை நேசி !
உன்னை நேசிப்பார்கள் என்பதற்காக அல்ல !
நீ வாழ்வில் பிரகாசிக்க!

Sunday, January 31, 2010

வாழ்வின் அர்த்தம்

"உள்ளதை - சொல்லிடவா!
என்
உள்ளத்தை- அள்ளிடவா !

தீப்பொறி பட்டால்தான்
மெழுகுகூட உருகும்
உன் அழகின் பார்வை
பட்டாலே
என் மேனி என்றும்
இளகும்

உன் கருவிழி பாதை
என் வாழ்வின்
வழி பாதை !

கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு
செல்லாதே !

கலவரம் செய்தாலும்
பரவாயில்லை
உன்னை காணாமல் என்னை
கொல்லாதே !

மெழுகு சிலை போன்றவளே
உன்னை கண்டால்
நான் சிலையாகிறேன் !

என் வாழ்வின் அரசியாக
நான்
விலையாகிறேன் !
என் வாழ்வில் வந்துவிடு
என் வாழ்க்கையை தந்துவிடு